Sunday, 8 February 2026

அண்மையில் படித்த புத்தகம் : சில்லாட்டை...முனைவர் சு.சோமசுந்தரி

 

அண்மையில் படித்த புத்தகம் : சில்லாட்டை

ஆசிரியர்                    : முனைவர் சு.சோமசுந்தரி

வெளியீடு     : கவியமுது பதிப்பகம், திருநின்றவூர் ,9283275782

முதல்பதிப்பு : அக்டோபர் 2025,மொத்த பக்கங்கள் 154, விலை ரூ 150

சில்லாட்டை என்னும் இந்த நூல் ஒரு சிறுகதைத் தொகுப்பு. மொத்தம் 25 கதைகள் உள்ள தொகுப்பு. இன்றைக்குத் தமிழ்நாட்டில் நிறையப் பெண்கள் உயர் கல்வி படித்திருக்கிறார்கள்.சமூக ஊடகங்களின் வருகைக்குப் பின்பு பெண்கள் பலர் எழுதுகிறார்கள்.தங்களைச் சுற்றி நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை உள்வாங்கி ,சமூகத்திற்குப் பயன்படும் வகையில் அதனைப் படைப்பாக மாற்றித் தருகிறார்கள்.அந்த வகையில் முனைவர் சு.சோமசுந்தரி அவர்களின் முதல் படைப்பாக வெளிவந்திருக்கும் இச்சிறுகதைத் தொகுப்பு பாராட்டுக்குரியது.



தனது என்னுரையில்  இந்த நூலின் ஆசிரியர் முனைவர் சு.சோமசுந்தரி அவர்கள் ‘ நமக்குள்ளிருக்கும் மன இறுக்கங்களை உடைப்பதற்கான வழியாக எழுத்தும் வாசிப்பும் இருக்கிறது.இதைப் படிக்கும் எல்லோரும் உணரமுடியும். நான் எழுத ஆரம்பித்த பிறகுதான் எனக்கான வெளி திறந்ததுபோல உணர்ந்தேன்.எனக்கான சிறகுகள் விரிய ஆரம்பித்தன. “ என்று குறிப்பிடுவது சிறப்பு.

இந்தச் சிறுகதைத் தொகுப்பின் முதல் சிறுகதை ‘அத்துமீறல்’.அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணிடம் அத்துமீற நினைக்கும் அவரது மேல் அதிகாரிக்கும் அந்தப்பெண்ணுக்குமான போராட்டத்தை விவரிக்கும் கதை.அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை ஒரு வழிகாட்டல் போலக் கொடுத்திருக்கிறார்.’தவறுகள் குற்றங்கள் அல்ல ‘ என்னும் சிறுகதையில் ,அத்து மீறி தவறு செய்யும் ஆண் அதிகாரி பேசுவதாக அந்தக் கதையை ஜெயகாந்தன் எழுதியிருப்பார்.இந்தக் கதையில் பெண் பேசுவதாக வருகிறது.

மறைந்த போன அப்பாவைப் பற்றிய நினைவுகளைப் பகிரும் கதையாக ‘அப்பா ‘ என்னும் கதை இருக்கிறது. நிறைய நினைவுகளைச் சொல்லும் கதை.25 கதைகளையும் ஓரிரு நாளில் படித்து முடித்தேன்.

இந்த 25 கதைகளில் எல்லாம் நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள்தான் கதாபாத்திரங்கள்.எவரும் அந்நியமாகத் தெரியவில்லை.பெரும்பாலான கதைகளில் பெண்கள் எப்படி எல்லாம் இடர்பாடுகளை எதிர்கொள்கிறார்கள் என்பதையே விவரிக்கின்றன. சில்லாட்டை என்னும் கதைத் தலைப்பில் அமைந்த கதையும் கூட ஒரு பெண்ணின் அவலத்தையே சொல்கிறது.

“ சிறிய வடிவத்தில் இருந்தாலும் ஒரு முழுமையான உணர்வையும்,நடைமுறையையும் வாசகருக்குச் சிறுகதை மூலம் யதார்த்தமாகப் பெண்ணியலை,சமுதாய நிகழ்வுகளை,கதைகளாக மிக எளிய நடையில் சுருங்கச்சொல்லி விளங்க வைத்துள்ளார் ஆசிரியர் “ என்று அணிந்துரையில் முனைவர் பேரா வே.பூங்குழலி பெருமாள் குறிப்பிட்டிருப்பது உண்மை.

“ அனுபவங்களை ஒவ்வொரு சூழலுக்கேற்ப நகர்த்திச்செல்லும் ஆசிரியரின் கதை சொல்லல் உண்மையிலேயே வசீகரிக்கிறது.பெண்பாத்திரங்கள் கொஞ்சம் உறுதிமிக்கவர்களாகவும் காட்டியுள்ளார் “ என்று அணிந்துரையில் முல்லை அமுதன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இவர் படைத்திருக்கும் இந்த 25 கதைகளின் தொடக்கமுமே இயற்கை வர்ணனையாக இருக்கிறது. இதனை “ஓவ்வொரு கதையின் தொடக்கத்திலும் இயற்கை வர்ணனை.அவை நம்மை நிலவோடு கட்டிப்போடுகின்றன.புல்லின் நுனியில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் பனித்துளியில் முகம் பார்க்கவைக்கின்றன” என்று கவிஞர் விஜயகிருஷ்ணன் மகிழ்வுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.



இயல்பான கதைகள். இன்றைய நடைமுறையில் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள்தான் பல கதைகளின் மையக்கரு.’குளியலறை விபத்துகள்’ என்னும் கதை மட்டும் நான் வாசிக்கும்போது கொஞ்சம் நெருடலைக் கொடுத்தது. தற்செயலாக நடப்பது ,அப்படியே நடக்கும் என நம்புவதே மூட நம்பிக்கை என்பது என் கருத்து.

கதை சொல்லல் கச்சிதமாக இருக்கிறது.கதாபாத்திரங்கள் பெயர்கள் எல்லாம் நல்ல தமிழ்ப் பெயர்களாகக் கதைகளில் கொடுத்திருக்கிறார்.அளவான விவரிப்போடு கதைகளை நகர்த்திச் செல்கிறார். தொடர்ந்து இவர் நிறையச் சிறுகதைகளை எழுதி வெளியிடலாம்.இன்னும் விரிவாகக்கூடச் சில கதைகளை இவர் விவரித்து எழுதலாம். படித்துப் பாராட்ட வேண்டிய சிறுகதைத் தொகுப்பு. எழுத்துப்பிழைகள் இல்லாத பதிப்பு. முதல் சிறுகதைத் தொகுப்பை அருமையாகக் கொண்டு வந்திருக்கும் தங்கை முனைவர் சு.சோமசுந்தரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

Saturday, 7 February 2026

பாம்புக் கடியும் சிகிச்சை முறையும்...முனைவர் வா.நேரு

 

திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் படித்துப் பார்த்து பாராட்டிய கட்டுரை....








நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் பிப்ரவரி 1-15,2026







Monday, 2 February 2026

இந்த நாள்! இந்த நாள்!...

 

இந்த நாள்! இந்த நாள்!...

அவருக்கு இறுதி

வணக்கம் செலுத்த

தமிழ்நாடே திரண்டு

வந்த நாள்…

அண்ணா..அண்ணா..

எனத் தமிழ்நாடே

அழுது புலம்பிய நாள்!

மாற்றார்களின் மனதிலும்

இடம்பிடித்த

மகத்தான மனிதருக்கு

இறுதி நிகழ்வு நடந்த நாள்!

சாரை சாரையாய்த் தமிழர்கள்

சென்னைக்கு வந்து குவிந்து

அழுது புலம்பிய நாள் !

 

தனக்கென ஏதும் சேர்க்காமல்

தமிழர்களுக்காய்

‘தமிழ்நாடு’ எனப் பெயர்

கொடுத்த தலைவன்…

 

நம் வீட்டுத்திருமணத்தை

நாமே நடத்திக்கொள்ள

சுயமரியாதைத் திருமணத்தைச்

செல்லும் எனச்

சட்டமாக்கிய தலைவன்

 

இறந்து எத்தனை

ஆண்டுகள் ஆனாலும்

இருமொழிக்கொள்கைதான்

தமிழ்நாட்டில் என்பதைச்

சட்டமாய் …

தமிழர்கள் மனதில்

ஓவியமாய் வரைந்து

வைத்த தலைவன்..

 

உனது குரல்

ஒலித்துக்கொண்டே இருக்கிறது

உலகமெல்லாம் இருக்கும்

தமிழர்கள் இல்லங்களில்…

உனது எழுத்து

சொல்லிக்கொண்டே இருக்கிறது

தம்பிகளுக்கு வழிகாட்டுதல்களை…

புதிய ‘பராசக்தி’கள் கூட

நீ சொன்ன

‘தீ பரவட்டும் ‘என்பதைத்தான்

திருப்பிச்சொல்கின்றன..

 

மறையவில்லை அண்ணா நீ!

எங்கள் மனதில் இருக்கிறாய்!

சாகவில்லை அண்ணா நீ !

சட்டங்களில் இருக்கிறாய் !

வாழ்க அண்ணா ! நீ வாழ்க!

 

                             வா.நேரு,03.02.2026

அண்மையில் படித்த புத்தகம் : கண்ணன் ஒரு நாத்திகன்...

அண்மையில் படித்த புத்தகம் : கண்ணன் ஒரு நாத்திகன்

நூல் ஆசிரியர்               : முனைவர் மா.வசந்த்

வெளியீடு                   : செண்பகம் வெளியீட்டகம்,தஞ்சாவூர்.

முதல் பதிப்பு : 2026, மொத்த பக்கங்கள் 56, விலை ரூ 80

கண்ணன் ஒரு நாத்திகன் முனைவர் மா.வசந்த்  அவர்கள் எழுதி அண்மையில் வெளிவந்துள்ள ஒரு குறுநாவல். தலைப்பைப் பார்த்த உடனேயே படிக்க வேண்டும் என்று தோன்றியது. சிலர் இப்படித் தலைப்பு வைத்தால் பலர் படிக்க மாட்டார்கள் என்று நினைத்து தயங்குவார்கள் .ஆனால் எனக்கு அறிமுகம் இல்லையென்றாலும் வசந்த் இப்படி ஒரு தலைப்பு வைத்ததற்காகவே வாங்கிப் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். வாங்கினேன். படித்தேன். சின்னப் புத்தகம். மொத்தம் 56 பக்கங்கள் மட்டுமே உள்ள நூல். பெரும்பாலும் உரையாடல்களாக வடிவமைக்கப்பட்டுள்ள குறு நாவல்.யார் படித்தாலும் ஆர்வத்துடன் படிக்கும்படியாக இந்த நூல் அமைந்துள்ளது சிறப்பு.கேள்வி பதில் வடிவில் பல வரலாற்று செய்திகளும் நூலில் இடம் பெற்றுள்ளது அருமை.ஓர் ஆசிரியராக இருக்கும் கண்ணன்,அவரது குடும்பம், பள்ளி, மாணவ மாணவிகளுடன் உரையாடல்,தலைமை ஆசிரியருடன் உரையாடல்,காவல் நிலையத்தில் அனுமதி வாங்குவதற்காகச் சென்று அனுமதி வாங்குவது என்று உயிரோட்டமான ,பல நிகழ்வுகள் உண்மைபோல் அமைந்திருப்பது நூலுக்கு வலு சேர்க்கிறது.

இந்த  நூல் ஆசிரியர் ,தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக்கல்லூரியில் ஆங்கிலத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றுபவர் என்னும் குறிப்பு உள்ளது. புகழ்மிக்க இக்கல்லூரியின் செயலாளர் திரு.இரா.சுந்தரவதனம்  அவர்கள் ,”பகுத்தறிவுச் சிந்தனைகளை இளம் வயதினரும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிய சொற்களில் தெளிந்த நடையில் உருவாக்கியுள்ளமை சிறப்புக்குரியது. பெரியாரின் கருத்தில் கோட்பாடுகளை உள்ளபடியே உள்ளத்தில் இருத்திப் பயணிக்கும் இவரை வாழ்த்துகிறேன் என்று வாழ்த்துரை வழங்கி இருக்கிறார் .

கல்லூரியின் முதல்வர் முனைவர் (திருமதி) இரா.இராசாமணி அவர்கள்,”  படைப்பிலக்கியத்தில் கையாளப்படும் அத்தனை  நுணுக்கங்களையும் மிகச் சிறப்பாகக் கையாண்டு படிக்கும்போது, தொய்வும் இன்றிப் பற்பல கருத்துக்களை விதைத்திருப்பது இன்றைய மாணவர்களுக்குத் தேவையான ஒன்றாகும். மாறுபட்ட முற்போக்கு சிந்தனையோடு இவ்விலக்கியத்தை வடித்தெடுத்த பேராசிரியர் முனைவர் மா.வசந்த் அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் உரித்தாக்குகின்றேன் என்று வாழ்த்துரை கொடுத்து  இருக்கிறார்.

 

நூல் ஆசிரியர் தன்னுடைய  என்னுரையில் ,” பெரியார் அவர்கள் முதன்முதலாகக் கடவுள் மறுப்பு வாசகத்தை முழங்கியதும் திருவாரூர் மண்ணில்தான். அப்படிப்பட்ட திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் பிறந்தவன் நான் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு தன்னுடைய உயர்வுக்கும், பகுத்தறிவுப் பாதைக்கும் காரணமான தனது தந்தையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். பணியில் சேர்ந்த பிறகு எனக்குப் பெரியார் பற்றிய புத்தகங்கள் வழங்கி என்னைப் பகுத்தறிவுப் பாதையில் அழைத்துச் சென்றது பேராசிரியர் தோழர் எழிலரசன் அவர்கள். வாசிப்பு மூலம் பெற்ற பகுத்தறிவுச் சிந்தனைகளை இன்றைய இளம் சமுதாயத்திற்கு ஏற்றவாறு கொண்டு சேர்ப்பது அவசியம் என்ற எண்ணம்தான் இந்த நூல் எழுதக் காரணம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.





முனைவர் மா.வசந்த் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.எழுத்து அருமையாகக் கைவருகிறது. இன்னும் பல படைப்புகளை வழங்கி சமூகத்திற்குப் பணியாற்ற அவருக்கு வாழ்த்துகள்.பகுத்தறிவாளர்கள் மட்டுமல்ல, அனைத்து மாணவ மாணவிகளும் படிக்கவேண்டிய நூல்.




 

Wednesday, 28 January 2026

இவனும் அவனும்...

 

கரப்பான் பூச்சி

உடலில் ஊர்வது

போன்ற உணர்வும்

அருவருப்பும்

முகநூலில் இவனது

பதிவுகளைப் படிக்கும்போது

ஏற்படுகிறது எனக்கு…

 

‘பாலியல் குற்றவாளி’

நாளும் ஒன்றுபேசும்

நாடகக்காரனைப் பின்பற்றி

இவன் போடும் பதிவுகள்

நாற்றம் கொடுக்கிறது எனக்கு…

 

மெத்தப்படித்தவன்

கைநிறையச் சம்பளம்

வாங்கும் பொறுப்பில்

இருப்பவன்.

எப்படி அவனுக்குக் கீழ்

இவனின் அரசியல் பணி

புரியாத புதிராய் எனக்கு…

 

திராவிட இயக்கத்துக்

குடும்பத்தில் பிறந்தவன்…

கலைஞர் கொண்டுவந்த

நுழைவுத்தேர்வு நீக்கத்தால்

பலன் பெற்றவன்…

கலைஞர் கொண்டுவந்த

இம்புரூவ்மண்ட் திட்டத்தால்

பொறியாளர் பட்டம் பெற்றவன்..

 

பட்ட பாடுகளை மறந்தானா?

திராவிடத்தால் வளர்ந்தோம்

எனும்  நினைவினை இழந்தானா?

‘வைத்தியம் பார்க்கவேண்டிய

பைத்தியக்காரன்’ பின்னால்…

போனதால் இவனும் சேர்ந்து

பைத்தியம் ஆகிவிட்டானா?

வைத்தியம் பார்த்துத்தான் 

இவனை மீட்கவேண்டுமா?

 

                              வா.நேரு, 29.01.2026

கனவு போலவே இருக்கிறது...

 

அவரின் நேரத்தின்

அருமை தெரிகிறது

எனக்கு…

இரண்டு நிமிடம்

பேசலாமா எனக்கேட்டு

பேச வேண்டியதைப்

பேசிவிட்டு வைத்து

விடுகிறேன் நான்...

 

சில நிமிடங்களில் 

அழைப்பு வருகிறது..

அண்ணே, ஏதுமே பேசாமல்

சடக்கென்று முடித்து

விட்டது போல் தோன்றியது...

நலம்தானே...

உடல்நிலை எல்லாம்

சரியாக இருக்கிறதா?

எனப் பல ஆண்டுகளுக்கு

முன் ஆற அமரப்

பேசியது போல 

பேச ஆரம்பிக்கிறார்..

அவரின் கரிசனம்…

அவரின் அன்பு…

ஆழமாய்ப் புரிகிறது

அவரது சில சொற்களில்

 

அவரது அலுவலகத்தின்

நிலைமை நான் அறிவேன்..

எப்போதும் பரபரப்பாய்

எப்போதும் ஆட்கள் சூழ…

அவரைச் சுற்றி 

ஒலிக்கும் செல்பேசிகளின்

ஓசை மீண்டும்

அவரது நேரமின்மையை

உணர்த்துகிறது...

 

அவரது பேச்சில் ஒரு

பரபரப்பு கூடுகிறது…

நிலைமையை உணர்கிறேன்..

எல்லோரும் நலமே..

நேரில் ஒருநாள்

ஆற அமரப் 

பேசுவோம் என்று 

செல்பேசி இணைப்பைத்

துண்டித்துக் கொள்கிறேன்

நான்!..

 

ஆற அமர

உட்கார்ந்து பேசும்..

கிண்டலும் கேலியுமாய்

அரட்டை அடித்து

மகிழும் காலமெல்லாம்

கனவு போலவே

இருக்கிறது இப்போதெல்லாம்..

 

                                    வா.நேரு,28.01.2026

Thursday, 22 January 2026

கற்றுக்கொண்டே இருக்கிறோம்.....

 

உண்மையான பாராட்டு

எப்போதும் நமக்கு ஓர்

உத்வேகம் தருகிறது…

இன்னும் பணியாற்ற..

இன்னும் எழுத…

இன்னும் வாசிக்க…

இன்னும் இன்னும்

எத்தனை உந்துதல்களை

நமக்கு ஒரு பாராட்டு

தருகிறது !


நேற்றைக்கு முந்தைய நாள்தான்

‘உண்மை ‘ இதழுக்கு

கட்டுரை ஒன்றை

அனுப்பி இருந்தேன் !

‘பாம்புக்கடி ‘ பற்றிய

கட்டுரை அது !

நேற்று காலை

மதுரைக்கு வந்த

93 வயது இளைஞர்

அய்யா ஆசிரியர் அவர்களைப்

புத்தகம் கொடுத்து

மதுரைக்கு வரவேற்றபோது ,




நீங்கள் ‘உண்மை’க்கு அனுப்பிய

‘பாம்புக்கடி’ பற்றிய

கட்டுரையைப் படித்தேன் …

நன்றாக இருக்கிறது…

நிறையப் புதிய செய்திகள்…

எனப் பாராட்டினார்…

மனதிற்குள் அப்படி ஒரு

மகிழ்ச்சி பொங்கி வழிந்தது…

மிகப்பெரும் இலக்கியவிருதினைப்

பெற்றது போல் உணர்வு

நிரம்பியது எனக்கு…

முதல் நாள் அனுப்பிய

கட்டுரையை உடனே படித்து

பார்த்தவுடன் பாராட்டும்முறை…

இந்த வயதில்…

கற்றுக்கொடுத்துக்கொண்டே

இருக்கிறார் எங்கள் ஆசிரியர் !

அவரிடம் கற்றுக்கொண்டே

இருக்கிறோம் நாங்கள்…

                        வா.நேரு, 22.01.2026